நேற்று நடந்த 100 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில், நீச்சல் வீராங்கனை சிமியோன் மனுவேல், தங்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். இலக்கினை 52.70 விநாடிகளில் கடந்த பிறகு தங்கத்தை வென்ற பின் சக நாட்டு வீராங்கனையை கட்டிப்பிடித்து சிமியோன் அழுத புகைப்படம், உலகையே உருக வைத்துள்ளது. சிமியோனின் அழுகைக்கு பின்னால் அத்தனை சோகம் அடங்கியிருக்கிறது. இந்த போட்டியில் கனடா நாட்டை சேர்ந்த வீராங்கனை இவருடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார்.
கடந்த 1960ம் ஆண்டுவாக்கில், அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பொது நீச்சல் குளங்களில் குளிக்கக் கூடாது. பொதுக்குளங்கள், ஏரிகளிலும் குளிக்க முடியாது. ஏதாவது நீச்சல் குளத்தில் கறுப்பின மக்கள் குளித்துக் கொண்டிருந்தால், அங்கு வரும் மற்றவர்கள் முதலில் அவர்களை வெளியேறச் சொல்வார்கள். கறுப்பின பிரபலங்களும் கூட அத்தகைய நெருக்கடியை சந்தித்துள்ளனர். கடந்த 1953 ம் ஆண்டு லாஸ் வேகாஸ் ஹோட்டல் ஒன்றில், சினிமா நடிகர் டரோத்தி டேன்ட்ரிட்ஜினின் கால் தண்ணீரில் பட்டதால், அந்த நீச்சல் குளத்தில் இருந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.
1964 ம் ஆண்டு பிரபல பாடகரும் நடனக் கலைஞருமான சம்மி டேவிஸ் ஜுனியர், புளோரிடாவில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்ததால், அவர் குளித்து முடித்ததும் தண்ணீர் வெளியே திறந்து விடப்பட்டது. அமெரிக்காவில் சம உரிமை கோரி கறுப்பின மக்கள் போரடிய காலகட்டத்தில், செயின்ட் அகஸ்ட்டின் நகரில், கறுப்பினத்தவர் குளித்த நீச்சல் குளங்களில் ஆசிட் கலக்கப்பட்ட சம்பவம் கூட நடந்துள்ளது.
சிமியோனின் முன்னோர்கள் அவ்வளவு நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். அத்தகைய
சமூகத்தில் பிறந்து இன்று நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற முதல்
ஆப்பிரிக்க அமெரிக்க வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் சிமியோன்.
நன்றி : விகடன்
நன்றி : விகடன்