Friday, August 19, 2016

பனை



பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம் என்பதைத்தாண்டி நாம் அதனை பாதுகாக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் பற்பல. வெள்ளம், வறட்சி போன்ற பல இயற்கை இடர்பாடுகளையும் தாண்டி வளரக்கூடியது பனை.
பனம்பழக்கூல், தெழுவு, நீரா, கள் போன்ற பானங்களும், நுங்கு, கருப்பட்டி, சக்கரை, சோறு போன்ற உன்னத்தகுந்த உன்னத பொருட்களும், ஓலை, விட்டத்திற்கான மரங்கள் போன்ற‌ கட்டுமான பொருட்களாகவும் பயன்படுகின்றன. பனம்பட்டை, பனம்புரடை என கிராம மக்களின் எரிபொருள் தோவைக்காகவும் பனை பயன்படுகிறது. பனைங்கிழங்கு, சீம்பு, சேவாக்காய் என கிட்டத்தட்ட அனைத்து பருவங்களிலும் ஏதாவது ஒரு பொருளை மனிதனுக்கோ அல்லது பிற உயிரினங்களுக்கோ கொடுத்துக்கொண்டே இருக்கிறது.
கால்நடைகளுக்கு கூலாகவும், பறவைகளுக்கு வீடாகவும் வாழ்கிறது பனை.
வருடம் முழுவதும் நிழல் என்பது இதன் மிகப்பெரும் கொடை. இவை அனைத்திற்கும் பனை பிற மரங்களைப்போன்று மனிதனிடம் எதிர்பார்ப்பது ஒன்றும் இல்லை. தென்னைக்கு நிகராக அனைத்தையும் தரும் பனைக்கு நீர் பாசனம் தேவையில்லை. மழை நீரை மட்டுமே கொண்டு வாழும் தன்மை கொண்டது.
"பனமரமே (பனைமரமே) காஞ்சு போச்சு" என்னும் சொல்லாடல் இன்றும் கொங்கு வட்டாரங்களில் மழையின் அளவையும், வறட்சின் கோரதாண்டவத்தையும் குறிக்கும் பதமாக உள்ளது.
இவ்வாறான‌ பனை, கடந்த சில தலைமுறைகளாக பெரும் அழிவை சந்தித்து வருகிறது. மரபு வீடுகளின் கட்டுமானம் அற்றுப்போய்விட்டதாலும், நுங்கைத்தவிர அதன் பிற பொருட்களை இன்றைய மக்கள் நாகரீகக்குறைச்சலாக கருதுவதாலும் பனை மரங்களின் எண்ணிக்கை பாதாளத்தை நோக்கிச்சென்று கொண்டுருக்கிறது.
பனையை தக்க வைக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் நான் எங்கள் தோட்டத்தில் அடுத்த மூன்று வருடங்களில் 30 பனையையாவது நட்டு வளர்க்க வேண்டும் என் நினைத்திருக்கிறேன். முதல் கட்டமாக 20 பனம்பழங்களை முளைக்கவைக்க அதன் கொட்டைகளை விதைத்துள்ளேன்.
பனங்கிழங்கு, சீம்பு பொன்றவற்றிற்கான பனம்பழ சேகரிப்பில் தற்போது ஈடுபட்டுள்ளேன். முதல் கட்டமாக 200 பனங்கிழங்கை உருவாக்க பனங்கொட்டைகளை விதைத்துள்ளேன். சீம்பிற்கான விதை சேகரிப்பு தொடர்கிறது.



No comments: