Showing posts with label Reforms. Show all posts
Showing posts with label Reforms. Show all posts

Thursday, May 26, 2016

குற்றமில்லா இந்தியா

தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் 2014 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் மொத்தம், 1387 சிறைச்சாலைகள் உள்ளன. இதில் மொத்தம் 4,18, 536 கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த  சிறைச்சாலைகளில் மொத்தம் 3,56,561 பேர்தான் தங்கமுடியும். அதாவது 100 பேர் இருக்கவேண்டிய இடத்தில் 117.4 கைதிகள் இருக்கிறார்கள். இதில் தண்டனைக் கைதிகளைவிட, விசாரணைக் கைதிகள்தான் அதிகம். 2,82, 879 (67.58%) பேர் விசாரணைக் கைதிகள்.

தண்டனை பெற்றவர்களில் அனேகம் பேர் சமூகத்தாலோ, பொருளாதாரத்தாலோ தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள். 70% சிறைவாசிகள் படிப்பறிவில்லாதவர்கள். ஜாமீன் கிடைத்தும் ஜாமீன் தொகை கட்டமுடியாமல் சிறையில் இருக்கும் அனைவருமே சமூகத்தால் தாழ்த்தப்பட்டவர்கள்தான். விசாரணைக் கைதிகளின் நிலைமையோ படுமோசம். தங்களின் உரிமைகள் என்ன என்பதைக்கூட அறியாமல், ஒரு வழக்குறைஞர் வைத்து வாதாட பணமில்லாமல் வாடுகிறார்கள்.

சிறைவாசிகளின் குறைவால் சிறைகளை மூடிக்கொண்டுவரும் நெதர்லாந்து நமக்கு சொல்லும் பாடம் என்ன? தண்டனைகள் மூலமாக மட்டும் குற்றங்களை குறைத்துவிட முடியாது. நாம், உண்மையாக குற்றங்கள் குறைய வேண்டும் என்று விரும்புவோமாயின், இங்கு இல்லாமை இல்லாத நிலையும், அனைவரும் சமம் என்னும் நிலையையும் உருவாக்க வேண்டும். சிறைச்சாலைகள் குற்றம்செய்தவர் திருந்தவே என்னும் மனநிலையும், அதற்கான சட்டமும் இங்கு வரும்வரை நெதர்லாந்தை எண்ணி பெருமூச்சை மட்டுமே விடமுடியும்...