Thursday, May 26, 2016

தமிழகமும் நலத்திட்டங்களும்

பொதுவாக, மக்களுக்கான நலத் திட்டங்களை அரசு அறிவிக்கும்போதெல்லாம் அதைப் பொருளாதார இழப்பாகக் கணக்கிட்டுக் காட்டி, வாதம் செய்வது இயல்பு. அது ஒரு மேட்டிமைத்தனமான பார்வைதான். இந்த விஷயத்தில் தமிழகம் எப்போதுமே விமர்சனங்களைப் பொருட்படுத்தாத, இன்னும் சொல்லப்போனால் ஏனைய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக, நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக இருந்துவருகிறது. ஒரே விஷயம் அரசு நினைவில் கொள்ள வேண்டியது, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அளிப்பது பிரச்சினை அல்ல; அதற்கான நிதியாதாரத்தை உருவாக்குவதும் மேம்படுத்துவதும் தக்கவைப்பதுமே சவால்கள்.

தமிழகத்தைப் பொறுத்த அளவில் நிதியாதாரத்தைப் பெருக்குவதற்கான ஆதாரங்களுக்கு குறைவு இல்லை. தொடர்ந்து வருவாய்ப் பெருக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வளவே. இதுவரை தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளுக்கான நிதியாதாரங்களில் ஒன்றாக டாஸ்மாக் வருமானம் இருந்திருக்கிறது. இப்போது படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டுவரவுள்ள சூழலில், புதிய நிதியாதாரங்களை அரசு கண்டறிந்து, அவற்றிலிருந்து வருவாயைப் பெருக்க வேண்டும். ஆட்சிப் பொறுப்பேற்ற சூட்டோடு சூடாக இதே வேகத்தில் தொழில் துறையை அரசு முடுக்கிவிட வேண்டும்.

நன்றி : தமிழ் இந்து

குற்றமில்லா இந்தியா

தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் 2014 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் மொத்தம், 1387 சிறைச்சாலைகள் உள்ளன. இதில் மொத்தம் 4,18, 536 கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த  சிறைச்சாலைகளில் மொத்தம் 3,56,561 பேர்தான் தங்கமுடியும். அதாவது 100 பேர் இருக்கவேண்டிய இடத்தில் 117.4 கைதிகள் இருக்கிறார்கள். இதில் தண்டனைக் கைதிகளைவிட, விசாரணைக் கைதிகள்தான் அதிகம். 2,82, 879 (67.58%) பேர் விசாரணைக் கைதிகள்.

தண்டனை பெற்றவர்களில் அனேகம் பேர் சமூகத்தாலோ, பொருளாதாரத்தாலோ தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள். 70% சிறைவாசிகள் படிப்பறிவில்லாதவர்கள். ஜாமீன் கிடைத்தும் ஜாமீன் தொகை கட்டமுடியாமல் சிறையில் இருக்கும் அனைவருமே சமூகத்தால் தாழ்த்தப்பட்டவர்கள்தான். விசாரணைக் கைதிகளின் நிலைமையோ படுமோசம். தங்களின் உரிமைகள் என்ன என்பதைக்கூட அறியாமல், ஒரு வழக்குறைஞர் வைத்து வாதாட பணமில்லாமல் வாடுகிறார்கள்.

சிறைவாசிகளின் குறைவால் சிறைகளை மூடிக்கொண்டுவரும் நெதர்லாந்து நமக்கு சொல்லும் பாடம் என்ன? தண்டனைகள் மூலமாக மட்டும் குற்றங்களை குறைத்துவிட முடியாது. நாம், உண்மையாக குற்றங்கள் குறைய வேண்டும் என்று விரும்புவோமாயின், இங்கு இல்லாமை இல்லாத நிலையும், அனைவரும் சமம் என்னும் நிலையையும் உருவாக்க வேண்டும். சிறைச்சாலைகள் குற்றம்செய்தவர் திருந்தவே என்னும் மனநிலையும், அதற்கான சட்டமும் இங்கு வரும்வரை நெதர்லாந்தை எண்ணி பெருமூச்சை மட்டுமே விடமுடியும்...

Tuesday, May 10, 2016

நுகர்வு என்பது எவ்வாறாக இருத்தல் வேண்டும்?

இன்று மானுடம் சந்திக்கும் பல சிக்கல்களுக்குக் காரணமாய் இருப்பது தேவையற்ற நுகர்வு. ஒரு உயிர் மட்டத்தின் எச்சம்மும், கழிவும் அடுத்த நிலையில் இருக்கும் உயிர்களுக்கு உணவாகின்றது. எடுத்துக்காட்டாக, பசுவின் சாணம், சாணி வண்டிற்கு உரமாகிறது. தேவையற்ற நுகர்வின் போது, அடுத்த நிலைக்குச் செல்லவேண்டிய ஒரு வளம், முன்னத்திய நிலையிலேயே தங்கிவிடுகிறது. இது தேங்கத்தேங்க இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், மீண்டும் இழந்த சமநிலையை சரிசெய்ய இயற்கை தன் வேலையைத் தொடங்கும். நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்றவையெல்லம் இயற்கை சமநிலையை உண்டாக்கப் பயன்படுத்தும் கருவிகள் தான். தேவையற்ற நுகர்வின் போது, சுற்றுப்புறத் தூய்மைக் கேடும் ஏற்படுகிறது.

எனவே, நுகர்வு என்பது இயற்கையை ஒட்டியதாக இருத்தல் வேண்டும். நமது எச்சமும், கழிவும் அடுத்த நிலைக்கு உணவாகவோ, பயனுள்ளதாகவோ இருத்தல் வேண்டும். நமது நுகர்வு சகஉயிரின் உரிமையையோ அடுத்தநிலையின் உணவையோ பறிப்பதாக இருக்கக் கூடாது...