Tuesday, April 26, 2016

இந்தியாவின் தண்ணீர் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?


நாம் தீர்விலிருந்து பல மைல் தூரம் வந்துவிட்டோம். அதுமட்டுமல்லாமல், மேலும் தவறான பாதையிலேயே செல்கிறோம். இது மராட்டிய மாநிலத்துக்கான பிரச்னை மட்டுமல்ல. மொத்த இந்தியாவிற்குமானது. ஆம், நாம் நீரை சேமிக்கும் வழிகளை ஆராயாமல். அதை மேலும் மேலும் சுரண்டும் வழிகளையே தேடுகிறோம். எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட தொழிற்நுட்பத்தின் மூலம் இந்தியா 24 மணி நேரமும் 23 மில்லியன் ஆழ்துளைக் கிணறுகளை இயக்கி கொண்டிருக்கிறது. இது தற்காலிகமான தீர்வுகளை வேண்டுமானால் தரலாம். ஆனால், நிரந்திர தீர்வை தராது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும், ஒரு தீர்வல்ல என்கிறார் ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் எழுத்தாளர் ஜான் ஆர்ச்சர். குடிநீராக்கப்பட்ட ஒரு லிட்டர் கடல் நீர் மீண்டும் கடலுக்கு ஒரு லிட்டர் விஷத்தை அனுப்புகிறது என்கிறார் ஆர்ச்சர். அது மட்டுமல்லாமல், இதற்கு அதிக மின்சாரம் தேவை. இது சூழலுக்கு கேடு விளைவிப்பதாகவே இருக்கிறது. ஆக, இதுவும் நிரந்தர தீர்வல்ல


தண்ணீர், மக்களின் அடிப்படை தேவைக்கானதைவிடவும், அதிகமாக தொழிற்சாலைக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்கள் எதுவும் நம் அடிப்படை தேவைக்கானதல்ல. ஆடம்பரத்துக்கானது.

சரி என்னதான் தீர்வு...? நுகர்வை குறைப்பது. நுகர்வை குறைப்பதன் மூலம் தேவையற்ற உற்பத்தியை குறைப்பது. சூழலை கெடுக்கும் தொழிற்சாலைகளை மூடவைப்பது. இது மட்டும்தான் தீர்வு. தவறுவோமானால், எதிர்காலம் மோசமானதாக இருக்கும். நீங்கள் பிள்ளைகளுக்கு பணம் சேர்த்து வைத்திருக்கலாம். ஆனால் குடிக்க தண்ணீர் இருக்காது. இது ஏதோ பக்கத்து மாநில பிரச்னை என்று நினைக்காதீர்கள். மராட்டியமும், மத்திய பிரதேசமும் நமக்கு அடிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி.

விழிப்போம். திசையை மாற்றுவோம். தீர்வை நோக்கி நடப்போம்.

நன்றி : விகடன்

No comments: